Saturday, January 30, 2010

களங்கம்

கடவுளின் கருவறையில்
களங்கப்பட்டது
அவளின் கருவறை
காவி(ரி)யக்காரனால்

விட்டு - கொடுத்து - பழகு

தமிழின மனங்கள்
சோழ பாண்டியர்

ஆயிரத்தில் ஒருவனில்
சிலை எடுத்தோடிய
தம்பி - சோழனை
வளைத்து அடிக்கிறாள்
அக்கா - பாண்டியன்

என் சொப்பு சிலைகளை
சில்லாக்கிய தம்பியை
சினவி முறைத்தாலே
அறைந்து சொல்கிறாள் - அம்மா
அனுசரித்து போகச்சொல்லி

Wednesday, January 13, 2010

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்
பொங்கிய ஏக்கங்கள்
எண்ணிய எண்ணங்கள்
தீர்க்குமோ இத்தைத்திங்கள்


நிகழ்ந்த நனவுகள்
கவிழ்ந்த கனவுகள்
மாறும் காட்சிகள்
ஆக்குமோ இத்தைத்திங்கள்


பணம் பறிக்கும் பள்ளிகள்
பணியில்லா திண்டாட்டங்கள்
ஒழிக்குமோ இத்தைத்திங்கள்


நயவஞ்சகங்கள்
நம்பகமில்லா தன்மைகள்
நம்பிக்கை மோசடிகள்
நசுக்குமோ இத்தைத்திங்கள்


அளவிலா ஆடம்பரங்கள்
பதறவைக்கும் பஞ்சங்கள்
சமநிலையாக்குமோ இத்தைத்திங்கள்


தர்க்கத்தில் மத இனங்கள்
தலையெடுக்கும் போர்க்குணங்கள்
தணிந்து மகிழும் சமத்துவங்கள்
துளிர்க்குமோ இத்தைத்திங்கள்


ஓங்கிய தொல்லைகள்
ஓயாத அலைகள்
ஓய்வெடுக்குமோ இத்தைத்திங்கள்


சிற்சில ஏற்றங்கள்
சிதறடித்த ஏமாற்றங்கள்
சென்றன அந்நாட்கள்


“தை பிறந்தால் வழி பிறக்கும்
தந்தைமார் சொன்னார்கள்
எந்த தை? எழுதி தாருங்கள் ”
என்ற வைரமுத்து வாசகங்கள்
வலுவிழக்குமோ இத்தைத்திங்கள்


இனி வரும் நாட்கள்
சிந்தித்து செயல்படுங்கள்
சிறந்த வழி தேர்ந்தெடுங்கள்
சிக்கலை தவிர்த்திடுங்கள்
நல்லதை நினைத்திடுங்கள்
அல்லதை தள்ளிடுங்கள்
ஆசையை துரத்திடுங்கள்
அளவோடு பெற்றிடுங்கள்
பண்பினை வளர்த்திடுங்கள்
பாசத்தை பகிர்ந்திடுங்கள்
நேசத்தோடு இருந்திடுங்கள்
நட்போடு பழகிடுங்கள்
உழவு தொழில் போற்றிடுங்கள்
உழைப்போரை உயர்த்திடுங்கள்
உரிமையை தந்திடுங்கள்
நல்லோரின் பழமொழிகள்
நலமாக்கும் நல்வழிகள்
கடைபிடிப்போம் நம்வாழ்வில்
தைத்திங்கள் முதல் நாள்
தமிழர்தம் திருநாள்
இனி வரும் நாளெல்லாம்
வள நாளாய் அமைந்திடவே
தமிழ்த்தாயை வணங்கிடுவோம்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


****** பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூடிய உரையாடல் போட்டிக்கவிதை ******

நட்பு - ஆற்றாமை

உன் நிலையும் என் நிலையும்
ஊரறிந்த ஒன்று
இரு குடிசை அருகருகே
ஒரு வரிசை என்று
ஒன்றாக படித்தோமே
ஆரம்பத்தில் அன்று
மேல்நிலையை முடித்தோமே
ஒரே நிலையில் நின்று
சமமதிப்பெண் பெற்றோமே
இருவருமே இன்று


கல்லூரிக்கு விண்ணப்பித்தோம்
பட்டம் பெறவென்று
ஒரே துறையை தேர்ந்தெடுத்தோம்
நட்பு பிரியாதென்று
சான்றொன்று கேட்டுவைத்தார்
ஜாதி என்னவென்று
சரிவர தெரிந்துகொள்ள
தாயிடம் ஓடிச்சென்று
தாசில்தாரிடம் கேட்டுபெற்றோம்
ஜாதிக்கென்று சான்று
கடிதம் வர காத்திருந்தோம்
கல்லூரி சீட்டுக்கென்று
வந்ததுபார் உனக்குமட்டும்
எனக்கு இல்லையென்று


கல்லூரியில் கேட்டுவந்தேன்
காரணம் என்னவென்று
நாம் எடுத்த மதிப்பெண்
உன் ஜாதிக்கு உயர்ந்ததாம்
என் ஜாதிக்கு குறைந்ததாம்
எவருமே சொல்லவில்லை
ஜாதிக்கொரு மார்க்கு என்று


படித்துறையை பிரித்து வைத்தார்
ஜாதிக்காக அன்று - நம்மில்
படிக்கும் துறையில் பிரிவுதந்தார்
ஜாதியினால் இன்று
நட்பாலே இறுதிவரை
நீயும் நானும் ஒன்றே
அரசாலே அறிந்தோமே
இன்னஜாதி என்றே


முன்னோர்கள் விதைத்ததுதான்
வினையாகுது இன்று
இருந்தாலும் இளையவர்கள்
இளைத்தவர்கள் என்றால்
பொருளாதார நிலையறிந்து
வாய்ப்பளித்தல் நன்று


***** உரையாடல் போட்டிக்கவிதை *****